top of page

வாக்கறிந்த பூரணமாய்

--By Shivashankar N

திருச்சிற்றம்பலம்

 

வாக்கறிந்த பூரணமாயும், எல்லாமாயும் அல்லதுவாயும் கறுதப்படுபவர் நம் சர்வேஸ்வரர். “நிற்பனவும், நடப்பனவும், நிலமும், நீரும், நெருப்பினொடு காற்றாகி, நெடுவானாகி, அற்பமொடு பெருமையுமாய், அருமையாகி..” (6 -98-7) நிற்கும் இறைவன், எப்பொழுதும் சுழலும் கால-நேரங்களை அளக்கும் சூரிய-சந்திர-நக்ஷத்திராதிகளாகவும் திகழ்வது ஆச்சரியமல்ல. ஊன மனமுடைய நமக்கு எளிதில் எல்லவற்றிலும் அவனை கண்டறியாமயினால், நம் பெரியோர், அனைத்திலும் அவனைக் காணவியலாவிடினும், அனைத்திலும் சிறந்ததில் அவனைக் காண நமக்கு வழிகாட்டியுள்ளனர். திரவியங்களில் அவன் தேன்; உலோகங்களில் அவன் பொன்; அப்படியே, இருபத்தேழு நக்ஷத்திரங்களில் அவன் ஆதிரை, என்று நம் சான்றோர் அவனை போற்றிப் பாடி மகிழ்ந்துள்ளனர். 

 

“அரைசே ரரவனாம் ஆலத் தானாம்

    ஆதிரை நாளானாம்…” 

என்று திருக்கருகாவூரிலே அப்பர் சுவாமிகள் இறைவனை வணங்கியுள்ளார் (6-15-7). 

 

 “ஞாலத்தா ராதிரை நாளினான் நாள்தொறும்

சீலத்தான் மேவிய திருமழ பாடியை

ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்

கோலத்தால் பாடுவார் குற்றமற் றார்களே.”

 

‘இப்பூவுலகில் சிறப்பாக விளங்கும் ஆதிரை என்னும் நட்சத்திரத்திற்குரிய சிவபெருமானுக்கு, நாள்தோறும் சிவாகமவிதிப்படி பூசைகள் நடைபெறுகின்ற திருமழபாடி என்னும் திருத்தலத்தினை, உலகத்தோரால் போற்றப்படுகின்ற மிகுந்த புகழையுடைய திருஞானசம்பந்தன் அருளிய திருப்பதிகத்தைச் சிவவேடப் பொலிவுடன் பாடுபவர்கள் தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்’ - என்று இப்பாடலின் பொருள் (3-28-11).   

 

சம்பந்தப்பெருமானின் தாயின் ஊரான் திருநனிபள்ளியில், சுந்தரமூர்த்தி நாயனார், 

 

“ஆதியன் ஆதிரையன் அயன்

    மாலறி தற்கரிய

சோதியன்…” (7-97-1)

 

என்று இறைவனை வணங்கியுள்ளார். 

 

வருடத்தில் பன்னிரண்டு ஆதிரை நன்னாட்களில் இறைவனுக்கு ஆகச்சிறந்தது மார்கழி மாதத் திருவாதிரை நாள் என்பது நாம் எல்லோரும் அறிவோம். தில்லையில் நடராஜப்பெருமான் இன்னாளில் சேந்தனாரிடம் செய்த திருவிளையாடலை நினைவு கூறவல்லவா தமிழகத்தில் அன்பர்கள் இல்லங்கள் தோரும் இன்னாளில் சித்சபேசருக்கு களியமுது கிளறி, படைத்து, வணங்கி மகிழ்கின்றோம்? 

 

மார்கழித் திருவாதிரை நாளில், எல்லா சிவாலயங்களிலும் ஆனந்த நடராஜமூர்த்திக்கு நள்ளிறவில் அபிஷேகங்கள் நடைபெருவதோடு, சில சிவாலயங்களில் பன்னாள் உத்ஸவங்களும், இறைவனுடைய தேருலாக்களும் விசேஷமாக நடைபெறும். தில்லை க்ஷேத்திரத்தில் ஆதிரை நாள் தேருலாவின் சிறப்பை நாம் கூறுவதை விட, சேந்தனார் திருவாக்கிலேயே காணலாம்:

 

“ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்

    அணியுடை ஆதிரைநாள்

நாரா யணனொடு நான்முகன் அங்கி

    இரவியும் இந்திரனும்

தேரார் வீதியில் தேவர் குழாங்கள்

    திசையனைத்தும் நிறைந்து

பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்

    பல்லாண்டு கூறுதுமே “ 

 

‘அழகினை உடைய ஆதிரைத்திருநாளில் தேவர் கூட்டத்தில் யாவர்யாவர் தரிசிக்கவந்தனர் எனின், திருமால், நான் முகன், அக்கினி, சூரியன், இந்திரன் முதலியோர் வந்தனர். தேர்ஓடும் வீதியில் தேவர் கூட்டங்கள் நாற்றிசையும் நிறைய, நிலவுலகெங்கும் நிறைந்த சிவபெருமானுடைய பழமையான புகழைப்பாடியும், அதற்கு ஏற்ப ஆடியும், அந்த ஆதிரைநாளை உடைய அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக’ - என்று தமது திருப்பல்லாண்டில் சேந்தனார் பெருமான் பதிவு செய்துள்ளார் (9-29-12). 

 

“ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்

கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்

கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்

ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.”

 

‘கடல் அலை திரை புரளும் திருமயிலாப்பூரின் சிறப்பு மிக்க திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ, பூம்பாவாய்?’ - என்று சம்பந்தப்பெருமான் பாடியுள்ளார் (2-47-4). 

 

திருப்புகலூரில், முருக நாயனார் திருமடத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த போது, அங்கு வந்த அப்பர் ஸ்வாமிகளை அவர் எதிர்கோண்டழைத்தார். நாவுக்கரசர், திருவாரூரில் திருவாதிரை நன்னாளை கண்குளிரக் கண்டார் எனக்கேட்டு, அவர் கண்ட சிறப்பினைத் திருஞானசம்பந்தர் வினவ:

 

“முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே

பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே

வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்

அத்தனாரூ ராதிரைநாளா லதுவண்ணம்” (4-21-1)

 

என்று தொடங்கி, பத்துப் பாடல்களைப் பாடி அருளினார் நாவுக்கரசர். 

 

‘ஆரூர் நகரிலே, முத்துக்களால் அமைக்கப்பட்ட மேற்கட்டியின் நிழலிலே அழகிய பொற்காம்பினை உடைய கவரி வீசப்பெற, நிவேதனப் பொருள்களின் பின்னே முறைப்படி பத்தி மிக்க ஆடவரும் மகளிரும் மாவிரதியரும் சூழ்ந்துவர, வெள்ளிய தலை மாலையை அணிந்த திருவாரூர்த் தலைவன் திருஆதிரைத் திருநாளில் வழங்கும் காட்சி, அது என்று எப்பொழுதும் அடியவர் மனக்கண் முன் நிற்பதாகும்’ - என்பது இப்பாடலின் பொருள். 

 

திருவாதிரை நாளன்று, “நணியார் சேயார் நல்லார் தீயார்..” மற்றும், “...பிணிதான் தீரு மென்று பிறங்கிக் கிடப்பார்..”  என்று எல்லோரும் ஆரூர் வந்தடைய, அவகள் எல்லோரின் கறுத்துக்கு அணியனாய் அவர் மனக்கண்முன் எப்பொழுதும் ஆரூர் பெருமான் நிற்க்கின்றான் என்று மேலும் படினார் அப்பர் பெருமான் (4-21-2). 

 

அன்று, ஆரூர் நகரில், வீதிகள் தோறும் வெண் கொடிகளும் மேற் கட்டிகளும் சிறந்த பவளங்களாலும் முத்துக்களாலும் புனையப்பட்டிருந்தனவாம். ஆதிரை நாளில், ஆரூரில், எம்பெருமானுடைய பல பண்புகளையும் பேசிக்கொண்டு ஒன்று சேர்ந்து அவனைப்பற்றிப் பாடி அடியார்கள் அவனுக்குத் தொண்டு செய்வதில் ஒருவருக்கு ஒருவர் முற்பட்டுப் பித்தரைப்போல அடைவு கெடப் பலவாறு பேசிக்கொண்டனராம். அன்று ஆரூர் நகரெங்கும், நிலாப் போன்று வெள்ளிய சங்குகளும் பறைகளும் ஒலிப்பவும் நின்ற இடத்தில் மீண்டும் நில்லாமல் கூத்தாடும் பலரும் காலில் கட்டிக் கொண்ட சதங்கை முதலியவற்றின் ஒலி பரவினவாம். ‘உம்மை அடியோங்கள் வழிபடாத நாள்கள் துன்பம் தரும் நாள்கள், உம்மை வழிபடும் நாள்கள் அடியேங்களுக்கு இன்பம் தரும் நாள்கள்’ என்று திருநீற்றைப் பூசிய அடியவர்கள் நாற்புறமும் சூழ்ந்து நின்றனராம். 

 

அன்று அப்பர் பெருமான் கண்ட காட்சி, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பின்னும், இன்றளவும் நம் கண்களால் நம் சிவாலயங்களில் காண முடியும். ஆரூரிலும், மயிலையிலும், தில்லையிலும் மேலும் பல்வேறு திருத்தலங்களிலும், இன்னாள், இப்பொழுது, ஆடல்வல்லானின் திருவாதிரை அபிஷேகக் கோலாகலங்களை நம் அடியார் குழாம், ‘ஐந்து புலங்களும் கண்களே கொள்ள’க் கண்டு களித்துக்கொண்டிறுப்பார்கள். எம்மெய்யடியார்கள் நடுவுள் நாம் இருப்பதாகக் கருதி, குஞ்சிதாங்க்ரி ஸ்ரீ ஆனந்த நடராஜராஜ மூர்த்திக்கு இவ்வாதிரைத் திரு நாளன்று நெஞ்சம் குழைய நாம் நமஸ்கரிக்கின்றோம். 

 

திருச்சிற்றம்பலம்

bottom of page